ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்

கலவை அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1 கோடியே 76 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

Update: 2023-03-15 18:47 GMT

மனுநீதி நாள் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பெனகர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் வரவேற்றார்.

இதில் 277 நபருக்கு ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கலவைப் பகுதியில் பயிர்கள் பசுமையாக உள்ளது. ஒரு முறை பயிரிட்டால் மீண்டும் அதே பயிர் வைக்க கூடாது. சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும்.

தற்போது காய்ச்சல், சளி, இருமலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அறிகுறி ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும். ஆரோக்கியமாக உடம்பு வைத்துக் கொள்ள வேண்டும். உலக தண்ணீர் தினத்தன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

வீடுகள்

உங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர், சாலை, சுடுகாடு ஆகிய வசதிகளுக்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேலும் திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் வேண்டுகோளை ஏற்று அத்தியாயம் கிராமத்தில் இருளர் பகுதி வீடுகளை கட்டி கொடுக்கவும் மேலப்பழந்தை சுடுகாட்டு பாதையில் உடனடியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு அலுவலர் முரளி, சமூக பாதுகாப்பு அலுவலர் தாரகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவகுமார், கலவை தாசில்தார் மதிவாணன், வருவாய் ஆய்வாளர்கள் ஜெகநாதன், செல்வராகன், மண்டல துணை தாசில்தார் சத்யா, கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத், ஸ்ரீதர், தீனதயாளன், ராணி, விஜி, ஒன்றிய குழுஉறுப்பினர்கள் ஜீவா, குப்பன், மூர்த்தி, அமரேசன் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பென்னகர் லதா வெங்கடேசன், வேம்பி கலைமணி, அத்தியாயம் மாயன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோகன் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்