அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பினால் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-03-28 19:03 GMT

மன்னார்குடி, மார்ச்.29-

பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பினால் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதை ெகாண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. அலுவலகம் எதிரே தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

பேட்டி

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராமன், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற தொண்டர்களின், கட்சி நிர்வாகிகளின் விருப்பம் நிறைவேறும் வகையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது.

தொண்டர்கள் மகிழ்ச்சி

பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பு அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு இந்த தீர்ப்பு ஒரு முன்னோட்டம்.

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொண்டர்களும் இல்லை, நிர்வாகிகளும் இல்லை. எது உண்மையோ, எது சரியோ அதுதான் எல்லா காலங்களிலும் வெற்றி பெறும். எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்