சேண்பாக்கத்தில் ரூ.1½ கோடியில் சாலைப்பணிகள்
சேண்பாக்கத்தில் ரூ.1½ கோடியில் நடைபெறும் சாலைப்பணிகளை மேயர் சுஜாதா ஆய்வுசெய்தார்.
வேலூர் சேண்பாக்கம் இ.பி.சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். எனவே அங்கு சாலை அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆய்வு செய்தார். அப்போது சாலை தரமானதாகவும், விரைந்து பணியை முடிக்கவும் உத்தரவிட்டார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ஹரிப்பிரியா உடன் இருந்தார். இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், சேண்பாக்கம் பகுதியில் சாலை அமைக்க பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1 கோடியே 65 லட்சத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சாலை அமைக்கப்பட்டு, பின்னர் அதன்மேற்பகுதியில் சாலை அமைக்கப்படும் என்றார்.