மாங்கம்வயலில் ரூ.1 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்-மீண்டும் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

மாங்கம்வயலில் ரூ.1 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் அந்த பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2023-08-23 18:45 GMT

பந்தலூர்

மாங்கம்வயலில் ரூ.1 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் அந்த பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

பாலம் கட்டும் பணி

பந்தலூர் அருகே உள்ள மாங்கம்வயல், பந்தபிளா, அம்மன்காள் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிமக்கள் குடியிருந்து வருகின்றனர். மக்களின் அவசர தேவைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கடலைகொல்லி வழியாக குந்தலாடி அல்லது அம்பலபாடிவழியாக பொன்னானிக்கு செல்லவேண்டும். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மாங்கம்வயலில் ஆற்றின் நடுவே இருந்த பழைய பாலமும் பழுதடைந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் மேலும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவுப்படி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் புதிதாக பாலம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிடப்பில் கிடக்கிறது

அதன்பின்னர் பழைய பாலத்தின் அருகே புதிதாக பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. ஆனால் திடீரென பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. பாலத்தின் இரண்டு பக்கமும் மண் நிரப்பபடாமலும் சிமெண்டுதளம் மற்றும் பாலத்தை ஒட்டிய இணைப்பு சாலை அமைக்கபடாமலும் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பாலத்திற்கும் சாலைக்கும் இடையே மூங்கில் பாலம் அமைத்து பொதுமக்கள், ஆதிவாசி மக்கள், மாணவ-மாணவிகள் கடந்து வருகிறார்கள். ஆனால் ஒருசில நேரங்களில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விடுகின்றனர். இதேபோல் அவசர தேவைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல எந்த ஒரு வாகனமோ ஆம்புலன்ஸ்களோ செல்ல முடிவதில்லை. இதனால் நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் சுமந்து செல்லும் நிலை நீடிக்கிறது. அதனால் பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிப்பதோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்