முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயார்

குடவாசல் பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-11 18:45 GMT

குடவாசல் பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பட்ட குறுவை சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது ஆறுகள் மூலமாக கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் குறுவை பயிர் சாகுபடி செய்வார்கள்.

அதற்கு முன்பாக ஆழ்துளை கிணறு வசதி கொண்ட விவசாயிகள் முன் பட்ட குறுவை சாகுபடியை மேற்கொள்வார்கள். திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்படுகிறது.

அறுவடைக்கு தயார்

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள செருகளத்தூர், பருத்தியூர், சேங்காலிபுரம், கண்டிரமாணிக்கம், புதுக்குடி, பிலாவடி, விக்கிரபாண்டியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் முன் பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலை உள்ளது.

கொள்முதல்

எனவே முன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

இதற்காக கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்