விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-06 11:15 GMT

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 550 ஆசிரியர், ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடைத்தாள் திருத்தும் மைய வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும், பணி நிரவல் இடமாறுதல் மூலம் மாறுதல் பெற்று கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் அவதிப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியை நிலுவையுடன் உடனே வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருப்பு பேட்ஜ்

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்ராஜ், மாவட்ட செயலாளர் மலைச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் விமலா ஜெயராணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. அப்போது ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்