சுமை தூக்கும் தொழிலாளியை கொன்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனை; திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Life time jail
பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தில் சுமை தூக்கும் தொழிலாளியை கொன்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
சுமை தூக்குவதில் தகராறு
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 46). சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி பிரகாஷ். கடந்த 2006-ம் ஆண்டு சுமை தூக்குவதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செபஸ்தியார் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. பின்னர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து 2012-ம் ஆண்டு செபஸ்தியார் விடுதலையானார். ஆனால் பிரகாஷ் தரப்பினர் தன்னை கொலை செய்துவிடுவார்களோ? என அஞ்சிய அவர் மதுரைக்கு சென்று தலைமறைவாக இருந்தார். அவ்வப்போது முத்தழகுப்பட்டிக்கு வந்து தனது குடும்பத்தினரை பார்த்து சென்றார்.
வெட்டி கொலை
இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக முத்தழகுப்பட்டிக்கு வந்த அவரை சந்தியாகப்பர் கோவில் பின்புறம் வழிமறித்து 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுப்பட்டியை சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் (33), சின்னப்பன்ராஜ் (37), அருள் ஆரோக்கியதாஸ் (40), தங்கம் (62), ஜஸ்டின்தாஸ் (28), ஜான்சன் பிரபாகரன் (30), அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த தாமரைக்கண்ணன் (29), விக்னேஷ் இன்பராஜ் (39) உள்பட 10 பேரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் வாதாடினார். எதிர்தரப்பினர் சார்பில் வக்கீல்கள் அசோகன், செல்வராஜ் உள்பட 5 பேர் வழக்கை நடத்தினர். 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி விமல்ராஜ் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் கைதான சின்னக்காளை (60), அவருடைய அக்காள் குழந்தை தெரசு (65) ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் 2 பேரையும் கோர்ட்டு விடுதலை செய்தது. குழந்தை தெரசுவின் கணவர் தான், 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.