காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தக்கலை:
கல்குளம் வட்டவழங்கல் அலுவலர் சுனில்குமார், கல்குளம் வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் நேற்று இரவு 7 மணிக்கு தக்கலை அருகே உள்ள பரைக்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர். 10 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சாமியார்மடத்தில் அந்த காரை மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் மீன் வைக்கும் பெட்டிகளின் அடியில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காரையும், அதில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.