பணத்தை இழந்த 41 பேருக்கு ரூ.31¾ லட்சம்

31¾ lakhs for 41 people who lost money

Update: 2022-11-15 20:51 GMT

நாகர்கோவில்:

ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழந்த 41 பேருக்கு ரூ.31¾ லட்சம் பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார்.

41 பேர் பணம் இழப்பு

குமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக்கூறி பண மோசடி செய்தல், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் மற்றும் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தல், கடன் அட்டையை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன்மூலம் மோசடி, ஜி பே, போன் பே போன்ற யுபிஐ பண பரிவர்த்தனைகளில் எண் மாற்றி போடும் பணத்தை திரும்பத் தராமல் மோசடி போன்ற ஆன்லைன், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு 41 பேர் பணத்தை இழந்தனர்.

இதுதொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தனர். இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்க சைபர் கிரைம் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இந்த குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன்மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வந்தது.

ஒப்படைப்பு

இந்த விசாரணையின்போது மோசடி செய்தவர்கள், மோசடியாக பெற்ற பணத்தை திரும்ப வழங்க ஒப்புக்கொண்டனர். அதன்படி அவர்களிடம் இருந்து, சைபர் கிரைம் போலீசார் ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843-ஐமீட்டனர். அந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பணத்தை இழந்த நபர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.

மேலும் விரைந்து செயல்பட்டு இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி, ஜி பே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணப்பரிமாற்றம் நடந்த வங்கி கணக்கில் இருந்து மீட்க உதவியாக இருக்கும். சைபர் கிரைம் போலீசார்இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இன்டர்நெட் மற்றும் ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தெரிவித்தனர்

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், " நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பினேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர்" என்றார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவர் கூறுகையில், "எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் கிடைக்கவில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.போலீசார் நடவடிக்கையை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்