திண்டுக்கல்லில் மாயமான 4 மாணவிகள் கரூரில் மீட்பு

Rescue of 4 female students

Update: 2022-11-15 16:45 GMT

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த 4 மாணவிகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது 4 மாணவிகளும் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துவிட்டு, மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் மாணவிகளின் தோழிகள் சிலரிடமும் விசாரித்தனர். எனினும் மாணவிகள் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. இதனால் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் கரூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டிருந்த 4 மாணவிகளையும் அங்குள்ள போலீசார் மீட்டனர். இதையடுத்து திண்டுக்கல் போலீசார் கரூர் சென்று மாணவிகளை மீட்டனர். விசாரணையில் 4 பேரும் பழனிக்கு சாமி கும்பிட சென்றுவிட்டு, திரும்பி வர வழி தெரியாமல் கரூர் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேருக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்