கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 கட்டிட தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-11-15 18:50 GMT

கழிவுநீர் தொட்டி

கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், வக்கீல். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 23), தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (35) ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வீட்டின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சிமெண்டு பூச்சுகள் முடித்து இருந்தனர். இதில் 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

விஷவாயு தாக்கியது

இந்தநிலையில் நேற்று அந்த தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ் என்பவர் அவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றுள்ளார். இதில் அவரும் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார்.

3 பேர் பலி

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கிருஷ்ணாபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி பலியான 3 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்