பல்லடம் அருகே, பனியன் நிறுவன வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 23 பேர் காயம் அடைந்தனர். இது ெதாடர்பாக தனியார் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ்கள் மோதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த வேன் ஒன்று நேற்று காலை தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வரச் சென்றது. அந்த வேனை டிரைவர் அபூர்வராஜ் (வயது 45) ஓட்டிச்சென்றார். பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பனியன் நிறுவன வேனின் பக்கவாட்டு பகுதியில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பனியன் நிறுவன வேன் சாலையோர பள்ளத்தில் இறங்கி சரிந்தது.
23 பேர் காயம்
இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பனியன் நிறுவன வேனில் வந்த தொழிலாளர்கள் அலறினார்கள். பஸ்சில் இருந்தவர்கள், நிலைக்குலைந்து, கம்பிகளில் மோதியும், பஸ்சுக்குள் கீழேயும் விழுந்தனர். பனியன் நிறுவன வேனில் இருந்த தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் ரோட்டின் ஓரமாக விபத்து நடந்ததால், பின்னால் வந்த மற்ற வாகனங்களும் பஸ் மீது மோதவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்ததுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி (50), புவனேஸ்வரி (24), மாடசாமி (60), செல்வராஜ் (70), செல்வி (68) மற்றும் தனியார் பஸ்சில் வந்த குமார் (27) உள்பட மொத்தம் 23 பேர் காயமடைந்தனர்.
டிரைவர் கைது
இந்த விபத்தால் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.