ஈரோட்டில் விபத்து: கல்லூரி மாணவர் பரிதாப சாவு; நண்பர் படுகாயம்- அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
ஈரோட்டில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்கள்
ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியை சேர்ந்தவர் கவின்ராஜ் (வயது 18). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பர் நசியனூர் சி.எஸ்.ஐ. நகரை சேர்ந்த வினோத்குமார் (17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இவர்கள் 2 பேரும் வள்ளிபுரத்தான்பாளையம் பகுதிக்கு சென்று கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சி முடிந்த பின்னர் இரவு 7.30 மணி அளவில் கவின்குமார், வினோத்குமார் இருவரும் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்
வேப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் இருந்து ஈரோடு -பெருந்துறை ரோட்டுக்கு வந்தபோது, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கவின்ராஜ், வினோத்குமார் 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
பரிதாப சாவு
எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கவின்ராஜ் பரிதாபமாக இறந்தார். வினோத்குமார் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கவின்ராஜின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கிடையில் மாணவர்கள் மீது மோதிய அரசு பஸ்சின் கண்ணாடியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.