பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்செந்தூர், நெல்லை, மதுரை, திருவனந்தபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
குடிநீர் வசதி
பாலக்காட்டில் இருந்து இயக்கப்பட்டாலும் பொள்ளாச்சியில் இருந்துதான் திருச்செந்தூர் ரெயிலில் அதிகமாக பயணிகள் செல்கின்றனர். ஆனால் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக குடிநீர் வசதி கிடையாது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேதனையில் தவிக்கும் நிலை உள்ளது.
காலி பாட்டில்கள்
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும்போது அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ரெயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி கூட இருந்தது. ஆனால் அகலரெயில் பாதையாக மாற்றிய பிறகு எந்த வசதிகளும் இல்லை. அங்கு குடிநீர் குழாய்கள் உடைந்து கிடக்கின்றன. அதில் காலி பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. குடிப்பதற்கு குழாயை திறந்தால் காற்று கூட வருவதில்லை. இதனால் விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் பாலக்காடு கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பாலக்காடு கோட்டம் தொடர்ந்து பொள்ளாச்சியை புறக்கணித்து வருகிறது. எனவே பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பொள்ளாச்சியை பாலக்காட்டில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.