பட்டப்பகலில் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை
வால்பாறையில் பட்டப்பகலில் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது. அதை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பட்டப்பகலில் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது. அதை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுத்தை தாக்கியது
வால்பாறையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சீதா முனிக்குமாரி (வயது 23) என்பவரை 35-ம் ெநம்பர் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது, திடீரென சிறுத்தை தாக்கிவிட்டு தப்பி சென்றது.
இந்த நிலையில் நேற்று காலை 11.45 மணிக்கு அதே தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த வடமாநில தொழிலாளி அனில் ஓரான்(27) என்பவரை சிறுத்தை தாக்கிவிட்டு தப்பி சென்றது. இதை கண்டு சக தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த அவரை மீட்டனர்.
கூண்டு வைத்து...
அப்போது அங்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தனது வாகனத்தில் ஆய்வு செய்ய வந்திருந்தார். உடனே அவர், தனது வாகனத்தில் அனில் ஓரானை ஏற்றி வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அறிந்த வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஏற்கனவே சிறுத்தை தாக்கி எருமை மாடு உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் அச்சம் அடைந்து உள்ளதுடன், அதை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.