பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

திருத்துறைப்பூண்டி, திருமக்கோட்டை பகுதியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-02 18:45 GMT

கோட்டூர்.

திருத்துறைப்பூண்டி, திருமக்கோட்டை பகுதியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்த மழை

திருத்துறைப்பூண்டி பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருத்துறைப்பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நெற்பயிர்கள் சாய்ந்தன

மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் 33 சதவீத அளவில் அறுவடை பணிகள் முடிவடையாத நிலையில், 2 நாட்களாக மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நின்று வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடிந்த பிறகு

அறுவடை பணியை தொடங்க 10 நாட்களுக்கு மேலாகும்.

மழை தொடர்ந்தால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிடும். அறுவடை செய்த நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களில் இடவசதி இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதத்தை கணக்கிடக்கூடாது

மழைநீரின் ஈரப்பதத்தினால் நெல் மணிகள் முளைத்து விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.மழைக்கு பிறகு அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

திருமக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. ெகாள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்க இடம் இல்லாததால் குறைந்த அளவே நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது..

விவசாயிகள் கவலை

ஆங்காங்கே நெல்மணிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல் மணிகள் நனைந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்