குணப்பிரியா எழுதிய கடிதத்தை வைத்து கொலையை திசை திருப்ப முயற்சியா?
கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் குணப்பிரியா எழுதிய கடிதத்தை வைத்து கொலையை திசை திருப்பாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் பாலமதி மலையில் கைப்பற்றப்பட்ட குணப்பிரியாவின் பிணத்தை பாகாயம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதற்குமுன்பு பெண் போலீசார் உடலை சோதனை செய்தனர். அப்போது சுடிதாரில் குணப்பிரியா எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.
அதில், கார்த்தியை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன். சிலமாதங்களுக்கு பின்னர் எனது திருமணம் பற்றி சித்தி மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் என் மீது கோபத்தில் இருந்தனர்.
கார்த்தி என்னை நன்றாக பார்த்து கொள்வான் என்று நம்பினேன். ஆனால் அவன் சரியாக வேலைக்கு செல்லாமல் பொறுப்பற்ற முறையில் சுற்றித்திரிகிறான். அவனுடைய பெற்றோரை சமாதானம் செய்து என்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கார்த்தி எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அதனால் இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. அதனால் கார்த்தியுடன் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனது பெற்றோர் வீட்டிற்கும் செல்வதற்கு விருப்பமில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
கார்த்தியின் நடவடிக்கையால் குணப்பிரியா அவருடன் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதற்கிடையே கணவன்-மனைவிக்கும் இடையே நடந்த தகராறில் கார்த்தி கட்டையால் அடித்து குணப்பிரியாவை கொலை செய்துள்ளார்.
குணப்பிரியாவை கொலை செய்தது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்று விசாரணையில் தெரிந்தவுடன் எவ்வித பாரபட்சமும் இன்றி கார்த்தியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன் எதிரொலியாக உடனடியாக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு கார்த்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.