கர்ப்பிணி மனைவியை கொன்று பாைற இடுக்கில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர் மகன்
காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை கொன்று அவரை திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகனே வீசியுள்ளார். வேலூர் மலையில் நடந்த இந்த கொலையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம்பெண் பிணம்
வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று முன்தினம் காலை பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பெண் பிரவுன் நிற சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அவருடைய முகம் சிதைந்திருந்தது. கழுத்தில் காயம் காணப்பட்டது.
பெண்ணை கொலை செய்துவிட்டு மலையின் உச்சியில் இருந்து தூக்கி வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 தனிப்படைகள்
இதுதொடர்பாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பாலமதி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பாலமதி மலையடிவாரம், ஓட்டேரி பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமராக்களில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணை மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பாலமதி மலைக்கு அழைத்து செல்வதும், பின்னர் வாலிபர் மட்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
அந்த வாலிபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் ஓட்டேரியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கார்த்தி (வயது 22) என்று தெரிய வந்தது.
அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குள்ளஞ்சாவடியை சேர்ந்த குணப்பிரியாவை (23) என்பவரை காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். சம்பவத்தன்று கார்த்தி மோட்டார் சைக்கிளில் மனைவி குணப்பிரியாவை பாலமதி மலைக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. எனவே இந்த கொலையில் கார்த்திக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
காதல் திருமணம்
குணப்பிரியா சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஏ.சி.மெக்கானிக் வேலை செய்து வந்த கார்த்தி நாளடைவில் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்ததால் அவருடைய தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இந்த நிலையில் கார்த்தி தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். அதனை பெற்றோர் ஏற்க மறுத்து விட்டனர்.
அதனால் கார்த்தி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை வள்ளிமலை மலையடிவாரத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். வீட்டில் சேர்க்காததால் கார்த்தி விருப்பாட்சிபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் மனைவியுடன் தங்கி உள்ளார். அவ்வப்போது கார்த்தி மேளம் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இதற்கிடையே குணப்பிரியா 7 மாத கர்ப்பமானார்.
கட்டையால் அடித்து கொலை
கார்த்தி தனது பெற்றோரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்லக்கோரி குணப்பிரியா அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணப்பிரியா குள்ளச்சாவடியில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு அவர் கடந்த 26-ந் தேதி இரவு 10 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தார். கார்த்தி மோட்டார் சைக்கிளில் ஏற்கனவே தங்கியிருக்கும் நண்பர் வீட்டிற்கு அவரை அழைத்து செல்ல முயன்றுள்ளார்.
குணப்பிரியா அங்கு செல்ல விரும்பாததால் பாலமதி மலையில் உள்ள கோவிலில் இரவு மட்டும் தங்கிவிட்டு காலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறலாம் என்று அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து வாடகை வீட்டில் குடியேறுவது மற்றும் கார்த்தியின் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி உள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் குணப்பிரியா தலையில் அடித்துள்ளார். அதில் அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத கார்த்தி உடைந்த மதுபாட்டிலை அவரின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் அவர் இறந்துபோனார். இதையடுத்து மலை உச்சியில் இருந்து பிணத்தை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனை போலீசார் கார்த்தியிடம் வாக்குமூலமாக பெற்று பதிவு செய்தனர்.
இதையடுத்து கார்த்தியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பார்த்து பழகி, காதல் திருமணமும் செய்து விட்டு கர்ப்பிணியான பின் மனைவி என்றும் பாராமல் அதுவும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஒருவரே கொலை செய்துள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.