கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவர் கைது
ரூ.25 ஆயிரம் கடனுக்கு ரூ.45 ஆயிரம் செலுத்திய பிறகும் கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர்
கோவை சுந்தராபுரம் ராமலிங்கநகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 38). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜி.டி. டேங்க் பகுதியை சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளர் முருகன் (30) என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார்.
அதற்கு வட்டியுடன் சேர்த்து மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதத்தில் ரூ.45 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதன் பின்னரும் முருகன் கூடுதலாக வட்டி தரும்படி கேட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மணிமேகலை, சில நாட்களுக்கு முன்பு முருகனின் வீட்டுக்கு சென்று எதற்கு இவ்வளவு வட்டி என கேட்டு உள்ளார்.
அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசி மணிமேகலையை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மணிமேகலை அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.