விராலிமலை, கீரனூரில் மழை

விராலிமலை, கீரனூரில் மழை பெய்தது.

Update: 2022-11-26 18:33 GMT

வறண்டு கிடக்கும் குளம், குட்டைகள்

விராலிமலை ஒன்றியத்தில் இந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் தங்களது கிணறு மற்றும் போர்வெல்லில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு குறைந்த அளவே நெல் விவசாயம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அதிகளவில் பருவமழை பெய்ததால் விராலிமலை ஒன்றியத்தில் 18 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நெல் விவசாயம் செய்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கே நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

கருமேகங்கள் சூழ்ந்தன

இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை ஏதும் இன்றி இரவில் பனி மற்றும் கடுங்குளிரும், பகலில் வெயிலும் அடித்து வந்தது. நேற்று காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை 5.15 மணியளவில் விராலிமலை ஒன்றியத்தின் கிழக்கு பகுதிகளான ஆலங்குடி, வெம்மணி, வேலப்படையான்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை நால்ரோடு, ஆம்பூர்பட்டி, மதயானைப்பட்டி, பேராம்பூர், மேலபச்சகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ½ மணி நேரம் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மானாவாரி விவசாயமான உளுந்து, பயிறு உள்ளிட்ட பயறுவகைகள் விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கீரனூர், அரிமளம்

கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்தது. அதன்பிறகு 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் கீரனூர் பஸ் நிலையம், மார்க்கெட், வடக்கு ரதவீதி, சிவன் கோவிலில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரிமளம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ½ மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்