திராவிட மாடலை மக்கள் மத்தியில் மாணவரணி எடுத்து செல்ல வேண்டும்- அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு
திராவிட மாடலை மக்கள் மத்தியில் மாணவர் அணி எடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
திராவிட மாடலை மக்கள் மத்தியில் மாணவர் அணி எடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
தி.மு.க. மாநில, மாவட்ட, மாநகர மாணவரணி கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை கருப்பாயூரணியில் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞரணியுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னோடியாக இருந்தது மாணவரணி. இதில் இருந்தவர்கள் அரசியலில் மிகப்பெரிய பொறுப்புக்கு வந்துள்ளனர். கல்லூரிகளில் மாணவரணியில் இருந்து வந்தவர்கள் திராவிட மாடலை, மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இருக்கும் இயக்கம் தி.மு.க. மட்டுமே. இந்தி எதிர்ப்புக்கு போராடிய இயக்கம் தி.மு.க.தான் என்றார்.
அரசியல் செய்கிறார்கள்
இதைதொடர்ந்து தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மதத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் தற்போது மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதனை மாணவர்களாகிய நீங்கள் முறியடிக்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. போராடிய வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்கு நடத்த வேண்டும். தேசிய அளவில் சமூக நீதி, கல்வி கூட்டாட்சியை வலியுறுத்தும் வகையில் தேசிய மாநாடுகளை கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரியில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்க உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.