மரைக்கா கோரையாற்றை தூர்வார வேண்டும்

desilting works wanted in river

Update: 2022-11-15 18:45 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டியின் முக்கிய வடிகால் ஆதாரமாக விளங்கும் மரைக்கா கோரையாற்றை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரைக்கா கோரையாறு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் முக்கிய வடிகால் ஆதாரமாக மரைக்காகோரையாறு உள்ளது. இந்த ஆறு ஆட்டூர், பண்டாரஓடை, எழிலூர், நேமம், மருதவனம், மாங்குடி, சோலைக்குளம், திருக்களர், நுணாக்காடு, தென்பாதி, ராஜகுத்தமங்கலம், விஸ்வகுத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம், பள்ளங்கோயில், கடியாச்சேரி, வீரபுரம், மடப்புரம், உள்ளிட்ட பல கிராமங்களுக்கு வடிகால் ஆதாரமாக உள்ளது.

ஆகாயத்தாமரை செடிகள்

இந்த ஆற்றில் அடைப்பு ஏற்படும் போது தண்ணீர் வடியாமல் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி பள்ளமான பகுதி என்பதால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டால் திருத்துறைப்பூண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக திகழும் மரைக்கா கோறையாற்றில் மண்டி உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே வரும் மழைக்காலங்களில் விவசாயத்தையும் காக்க முடியும்.மேலும் வெள்ளம் ஊருக்குள் புகாமல் காக்க முடியும். எனவே அதிகாரிகள் விரைவில் மரைக்காகோரையாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

தனிக்கவனம்

கோவிந்தராஜ் (எழிலூர்):-எழிலூர், ஆட்டுர், நேமம், பண்டாரஓடை, நுனாக்காடு, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் தண்ணீர் வடியும் முக்கிய ஆதாரமாக மரைக்காகோறையாறு உள்ளது. தற்போது மரைக்காகோரையாறு ஆகாயத்தாமரை செடிகளால் படர்ந்து கிடக்கிறது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கரைகள் பலப்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும். தற்போது மிகுந்த சிரமத்துக்கு இடையே விவசாய பணிகள் நடைபெறுகிறது. எனவே நீர்நிலைகள் பாதுகாப்பில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

சுப்பிரமணியன் (பண்டாரஓடை): ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்வது வாடிக்கை. இதற்கு முக்கிய காரணம் வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றாததே ஆகும். தண்ணீர் வேகமாக வடிந்து ஓடினால் கண்டிப்பாக ஊருக்குள் தண்ணீர் புகாது. எனவே அதிகாரிகள் மரைக்காகோரையாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்