பழங்குடியினர் பெருமை தின பேரணி
வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின பேரணி நடந்தது
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள தலையணையில் 49 பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தேன் மற்றும் திணை சேகரித்தும், மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை எடுத்தும் விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இவர்களின் பெருமைகளையும், பணிகளையும் பாராட்டும் வகையில் பழங்குடியினர் பெருமை தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி அருகே இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.
இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. பின்னர் கலெக்டர் ஆகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'தலையணை பகுதியில் வசித்து வரும் பழங்குடியினரின் நீண்டகால கோரிக்கையான, அவர்களது பகுதியில் இருந்து வாசுதேவநல்லூர், புளியங்குடிக்கு சென்று வர விரைவில் பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது தொடர்பாக கருத்துரு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்ததும் நிதியுதவி செய்யப்பட்டு அவர்களுக்கு வேண்டிய வீடுகள் கட்டி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.
நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கள் தென்காசி முருகுசெல்வி, சங்கரன்கோவில் பரிமளா, சிவகிரி தாசில்தார் செல்வகுமார், பழங்குடியின மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பாண்டியன், தலையணை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலகணேஷ், முருகானந்தம், கனகவள்ளி, வருவாய் அலுவலர் வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.