வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்
Those who are going to work abroad should follow the instructions of the government
வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சுற்றுலா விசா
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து அரசுக்கு தகவல் பெறப்படுகிறது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் இனிவரும் காலங்களில், இதனை தவிர்க்க மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தூதரகங்கள்
அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளை பின்பற்றி வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரியும் பணியில் தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத் துறை" ஈடுபட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் 9600023645, 8760248625, 044-28515288 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.