வீடுகளை சூழ்ந்த மழைநீர்; குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Protest
குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதற்கிடையே குஜிலியம்பாறை அருகே உள்ள சி.அம்மாபட்டி இந்திராகாலனியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனர்.
இந்தநிலையில் இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்திரா காலனிக்கும், சி.அம்மாபட்டிக்கும் இடையே திண்டுக்கல்-கரூர் ரெயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தை கடந்து தான் இப்பகுதி மக்கள் சி.அம்மாபட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, கற்பகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் கூறுகையில், திண்டுக்கல்-கரூர் சாலையில் இருந்து செல்லப்பட்டநாயக்கனூர் வழியாக இந்திரா காலனி வரை சாலை அமைக்க ரூ.14¼ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அதேபோல் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.