இரவு நேர குற்றங்களை தடுக்க நவீனமயமாக்கப்பட்ட ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்

To prevent night crimes Introducing the modernized Smart Guard app

Update: 2022-11-15 18:45 GMT

தமிழக காவல்துறை கணினி மயமாக்கல் திட்டத்தின் கீழ் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட ஸ்மார்ட் காவலர் செயலியை நேற்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், இந்த ஸ்மார்ட் காவலர் செயலி, மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் கடலூர் புதுநகர், சிதம்பரம் டவுன், நெய்வேலி டவுன்ஷிப், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 போலீஸ் நிலையங்களில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நவீனமயமாக்கப்பட்ட புதிய இ-பீட் செயலியும் அடங்கும்.

இதன்படி ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசார் பழமையான ரோந்து புத்தக முறையில் இருந்து மாறி, இந்த புதிய செயலி மூலம் தினசரி ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் தனியாக வசிக்கும் முதியோர் மற்றும் பூட்டி கிடக்கும் வீடுகளை போலீசார் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பூட்டி கிடக்கும் வீடுகள்

இந்த புதிய செயலி மூலம் இரவு நேரங்களில் நடக்கும் குற்றசெயல்களான வீடு புகுந்து திருடுவது, பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிப்பது. தனியாக உள்ள முதியோர் மீது தாக்குதல் செய்வது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணி மேற்கொள்வார்கள். மேற்கண்ட போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக உள்ள முதியோர் குறித்த விவரங்கள் இந்த புதிய செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் இந்த செயலி மூலம் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகள் உள்ள பகுதிகளில் நேரில் சென்று கண்காணிப்பார்கள். இந்த செயலி மூலம் உயர்அதிகாரிகள் ரோந்து போலீசாரின் நடமாட்டத்தை இருந்த இடத்தில் இருந்து கண்காணிக்கவும் முடியும்.

பாதுகாப்பு பணி

அதனால் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல இருந்தால் அல்லது தொடர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக வசிக்கும் முதியோர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் போலீசார் தொடர்ந்து கண்காணித்து குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.

எனவே கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் முதியோர் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஹலோ சீனியர் 82200 09557 காவல் உதவி எண்ணையும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய லேடீஸ் பர்ஸ்ட் 82200 06082 காவல் உதவி எண்களையும் தொடர்பு கொண்டால் பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன் கார்த்திக்குமார், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்