வேப்பூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு அதிகாரிகளை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
Near Veypur A farmer died after stepping on a downed power line Relatives blocked the road to condemn the authorities
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை கால்நடைகளுக்கு தீவனம் எடுத்து வருவதற்காக அருகே உள்ள தனது வயலுக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது அவர் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மின் வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் மின்கம்பி அறுந்து விழுந்து, ராமசாமி இறந்ததாக கூறி கடலூர்-சேலம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். இதற்கிடையே ராமசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.