போலீஸ் மோப்ப நாய் சிம்பா திடீர் சாவு

Police sniffer dog Simba dies suddenly

Update: 2022-11-15 16:19 GMT

வேலூரில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ் மோப்ப நாய் சிம்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மோப்பநாய் சிம்பா

வேலூர் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பிரிவில் லூசி, சிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய 5 மோப்ப நாய்கள் இருந்தன.

இதில் சிம்பா கொலை மற்றும் கொள்ளை, கஞ்சா சம்பந்தப்பட்ட குற்றவழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், லூசி, அக்னி, ரீட்டா ஆகியவை வெடிகுண்டை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

குட்டி சாராவிற்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. லூசி, சிம்பா ஆகிய நாய்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தொடர்ந்து மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்தன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிம்பாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு வேலூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது.

சிம்பாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பலனின்றி திடீரென உயிரிழந்தது.

இதையடுத்து வேலூர் வசந்தபுரத்தில் உள்ள போலீஸ் மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் சிம்பா அடக்கம் செய்யப்பட்டது.

இறந்த சிம்பாவிற்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகரன், ரமேஷ் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.

துப்புதுலக்குவதில் பெரும் உதவி

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிம்பா கடந்த 2013-ம் ஆண்டு 3 மாத குட்டியாக மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்த 250 கொலை, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் துப்பு துலக்குவதற்கு இந்த சிம்பா பெரும் உதவியாக இருந்தது.

ஆம்பூரில் கடந்த 2020-ம் ஆண்டு வடஇந்திய வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட சக தொழிலாளி அப்பாவி போன்று கொலை குறித்து ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த சிம்பா, போலீஸ் நிலையம் சென்று குற்றவாளியை கவ்வி பிடித்தது.

அதேபோன்று விருதம்பட்டில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளியின் வீட்டிற்கு சென்று அவரை கண்டுபிடிக்க உதவியது.

ஏலகிரி மலையில் நடைபெறும் கோடைவிழாவில், நாய்கள் கண்காட்சியில் சிம்பா பங்கேற்று ஆண்டுதோறும் முதல் பரிசு பெற்றது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்து விட்டது.

இதற்கு பதிலாக புதிதாக மற்றொரு மோப்பநாய் விரைவில் சேர்க்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்