கோபி அருகே தூய்மை பணியாளர் கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-26 22:43 GMT

கடத்தூர்

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூய்மை பணியாளர்

கோபி அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைசெய்து வந்தார். தீபாவளியையொட்டி அவர் ஊருக்கு வந்து இருந்தார்.

இந்தநிலையில் முருகனும், அவருடைய மனைவியும் நேற்று மாலை 3.30 மணி அளவில் வண்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். பின்னர் முருகன் படித்துறையில் நின்று குளித்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி அருகே துணி துவைத்து கொண்டிருந்தார்.

அடித்து செல்லப்பட்டார்

அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் தண்ணீரில் தவறி விழுந்தார். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றதால் நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. வாய்க்காலில் தத்தளித்த அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைப்பார்த்த அவருடைய மனைவி `காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்` என அபயக்குரல் எழுப்பினார். உடனே அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அவரது கதி என்ன?

இதையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முருகனை தேடி பார்த்தார்கள். மாலை 6.30 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட முருகன் எங்காவது நீந்தி கரை சேர்ந்தாரா? அல்லது வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்