குடிநீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
ராஜபாளையத்தில் குடிநீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகரசபை தலைவி பவித்ரா ஷியாம் கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் குடிநீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகரசபை தலைவி பவித்ரா ஷியாம் கூறினார்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
இதுகுறித்து நகரசபை தலைவி பவித்ரா ஷியாம் மேலும் கூறியதாவது:-
ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீருக்கான கடன் தொகையை செலுத்த போதிய நிதி நிலைமை இல்லாத காரணத்தால் அப்போது அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் 2016-ன் படி வீட்டு பயன்பாட்டிற்கான குடிநீர் கட்டணத்தை 500 சதுர அடிக்கு குறைவாக உள்ள வீடுகளுக்கு மாதம் ரூ.150 என்றும், 500 சதுர அடிக்கு அதிகமாக உள்ள வீடுகளுக்கு சதுர அடி அடிப்படையில் ரூ.190, ரூ.230, ரூ. 270 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு 500 சதுர அடிக்கு குறைவாக உள்ள கட்டிடங்களுக்கு ரூ.450 என்றும், 500 சதுர அடிக்கு அதிகமாக உள்ள கட்டிடங்களுக்கு சதுர அடி அடிப்படையில் ரூ.570, ரூ. 690, ரூ.810 என நிர்ணயம் செய்து பொது மக்களின் சுமையை உயர்த்தி விட்டு சென்று விட்டனர்.
கட்டணம் குறைப்பு
தற்போது தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் ராஜபாளையம் நகராட்சி நகர்மன்ற 2022-ன் படி கீழ்க்கண்டவாறு குடிநீர் கட்டணம் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கட்டிடத்தின் சதுர அடி மாதம் ஒன்றுக்கு குடிநீர் கட்டணம் 500 சதுர அடிக்கு குறைவானது ரூ.100, 500 சதுர அடிக்கு அதிகமானது ரூ.150 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் தொழிற்சாலை 300 சதுர அடிக்கு குறைவானது ரூ. 200, 300 முதல் 500 சதுர அடி வரை ரூ.300, 501 முதல் 1000 சதுர அடி வரை ரூ.450, 1001 சதுர அடிக்கு மேல் ரூ. 570 என குறைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரி
மேலும் ராஜபாளையம் நகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்கு ரூ.8.78 கோடியில் மானியம் பெறப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. மீதமுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மேலும் நிதி வழங்கக்கோரி சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பதற்கு, சொத்துவரி விகிதத்தை 19 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.