இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி எடுத்துச் செல்லும் அவலம்
மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீர் எடுத்துச் செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள அன்னியூர் ஊராட்சியை சேர்ந்த செருகுடி பாகசாலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கீர்த்தமான் ஆறு ஓடுகிறது. இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் இப்பகுதியில் யாராவது இறக்க நேரிட்டால் இந்த ஆற்றில் இறங்கித்தான் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது இறுதி சடங்கு முடிந்து உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழக்கம்போல அவரது உடல் ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது உடலை தூக்கிச் சென்ற 2 பேர் திடீரென தண்ணீரில் மூழ்கியதால் உடன் சென்றவர்கள் அவர்களை காப்பாற்றி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் யாராவது இறக்க நேரிட்டால் மயானத்திற்கு தூக்கிச் செல்ல சரியான பாதை வசதி இல்லை. இதனால், இங்குள்ள ஆற்றை கடந்துதான் உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.
பாலம் கட்ட வேண்டும்
ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால் உடலை எடுத்துச் சென்று விடலாம். தற்போது கழுத்தளவு தண்ணீர் ஓடுவதால் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இங்குள்ள மயானத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே ஓடும் கீர்த்தமான் ஆற்றில் பாலம் கட்டி தரவேண்டும் என கடந்த 60 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, எங்களின் நிலை கருதி வரும் நிதி ஆண்டிலாவது ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.