தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
ஆனைமலை அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனைமலை,
ஆனைமலை அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளி மாணவர்கள்
ஆனைமலை அடுத்த தாத்தூர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அன்றாட தேவைகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்ல ஆனைமலை பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தாத்தூர், ஆனைமலையை இணைக்கும் பகுதியில் தரைப்பாலம் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், கடந்த 2 மாதங்களாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இதனால் தாத்தூர் பகுதி பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆனைமலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். பணி முடிவடையாததால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபயாம் உள்ளது. மேலும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பணி தீவிரம்
இதுகுறித்தும், தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். தற்போது பாலத்தின் உயரம் குறைக்கப்பட்டு, தரைப்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் கான்கிரீட் போடும் பணி நடக்கிறது. பின்னர் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தரைப்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், அவசர தேவைகளுக்கு டி.எஸ்.ஏ. நகரை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆனைமலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தற்போது தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.