திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில் இயக்கம்

திண்டுக்கல்-பாலக்காடு இடையே வருகிற 24-ந் தேதி முதல் மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. ஆனால், பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையை புறக்கணித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

Update: 2022-09-20 18:45 GMT

பொள்ளாச்சி, 

திண்டுக்கல்-பாலக்காடு இடையே வருகிற 24-ந் தேதி முதல் மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. ஆனால், பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையை புறக்கணித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மின்மயமாக்கல் பணி

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான ரெயில் பாதையை மின்மயமாக்க ரூ.159 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதை ரூ.37 கோடியே 36 லட்சம் செலவில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்து மின்சார என்ஜின் மூலம் கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் பழனி-கோவை வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பழனியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல்-பழனி இடையே மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

மின்சார ரெயில்

இந்தநிலையில் அந்த வழித்தடத்திலும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வருகிற 24-ந் தேதி முதல் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வருகிற 24-ந் தேதி முதல் சென்னை-பாலக்காடு தினசரி விரைவு ரெயில், மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை மின்சார ரெயிலாக இயக்கப்படும். இதேபோன்று பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் நெல்லை வரை மின்சார ரெயிலாக இயக்கப்பட உள்ளது என்றனர்.

புறக்கணிப்பு

இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடு வரை மட்டும் மின்சார ரெயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையை புறக்கணித்து உள்ளனர். இந்த வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவை வரை டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த ரெயிலை மின்சார ரெயிலாக இயக்க எந்த அனுமதியும் கொடுக்கவில்லை.

இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து அகல ரயில் பாதை, மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டும் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடம் எதற்கும் பயனில்லாமல் உள்ளது. இந்த ரெயில் பாதையை தென்னக ரெயில்வே பாலக்காடு கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழக பகுதிகளை பாலக்காட்டில் இருந்து பிரித்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிதாக ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரை திரட்டி போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்