மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள், கரடி நடமாட்டம் அதிகரிப்பு-வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தல்

Increase in wild elephants, bear movement on Manjoor-Coimbatore-Forest department advises motorists to be careful

Update: 2022-09-15 18:45 GMT

ஊட்டி

கோவை- மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

காட்டு யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாலை 6 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூருக்கு செல்லும் கடைசி பஸ்சை அவ்வப்போது காட்டு யானைகள் வழி மறிக்கின்றன.

சாலையில் நடமாடிய கரடி

சமீபத்தில் கெத்தை பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் ஒய்யாரமாக உலா வந்தன. மேலும் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகள், சாலையோர மரக்கிளைகளை உடைத்து துவம்சம் செய்தன. கூட்டத்திலிருந்த குட்டி யானை அங்குமிங்கும் ஜாலியாக ஓடி திரிந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். மேலும் சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பினர். காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

இதே போல் தற்போது கெத்தை பகுதி சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கவனமாக செல்ல வேண்டும்

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது. அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை அச்சுறுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக் கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்