ஓட்டல் பணி முதல் டி.வி. தொடர்வரை... ரூபாலி கங்குலியின் போராட்ட வாழ்க்கை

அனுபமா என்ற பிரபலமான டி.வி. தொடரில் அனுபமாவாக நடித்த ரூபாலி கங்குலி, இன்று இந்திய தொலைக்காட்சிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்திருக்கிறார். கலை வாழ்வில் அவர் உயர்ந்த கதையை மனந்திறந்து பேசியிருக்கிறார்.

Update: 2022-09-25 08:48 GMT

 

ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரூபாலி, தாய்மைக்கு பிறகு 7 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகுதான், அனுபமா தொடர் மூலம் மீண்டும் திரையில் மின்ன ஆரம்பித்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ''சினிமா நடிகைகளுக்கு சின்னத்திரை வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை'' என்பதை உணரவைத்தார்.

தேசிய விருதுபெற்ற இயக்குநர் அனில் கங்குலியின் மகள்தான் ரூபாலி. கோரா ககாஸ் (1974), தபஸ்யா (1975) மற்றும் அஞ்சல் (1980) போன்ற படங்களை இயக்கியுள்ளார், அனில் கங்குலி. இரண்டு தோல்விகளும், தர்மேந்திராவுடன் நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட ஒரு படமும் குடும்பத்திற்குக் கஷ்டகாலத்தைக் கொண்டுவந்தன என்று ரூபாலி நினைவுகூர்ந்தார்.

"எனக்கு 12 வயதாக இருக்கும்போதே சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால், அப்பாவுக்கு இரு தோல்விகள். எங்கள் கடினமான நேரம் தொடங்கியது. என் கனவு பின்னுக்குத் தள்ளப்பட்டது. எல்லா வேலைகளையும் செய்ய நேர்ந்தது.

ஒரு பேஷன் துணி கடையில் வேலை செய்தேன். ஓட்டலில் உணவு பரிமாறினேன். ஒரு முறை அப்பா விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பார்ட்டியிலும் பணியாளராக இருந்தேன். விளம்பரங்களிலும் வேலை பார்த்தேன். அப்படித்தான் என் கணவர் அஷ்வினைச் சந்தித்தேன். நான் தொலைக்காட்சியில் நடிக்க முயற்சி செய்யலாம் என்று அவர் பரிந்துரைத்தார். ஏன் கூடாது என்று நானும் யோசித்தேன்" என்று அவர் விவரித்தார்.

தொடர் தோல்விகளால், ரூபாலியின் தந்தை சொந்த வீட்டை விற்று படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படி எடுக்கப்பட்ட படமும் சில பிரச்சினைகளால் நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு, ரூபாலியின் குடும்பத்திற்கு பெரும் சுமையாக மாறியிருந்தது.

சில நாட்கள் அவர்கள் பணமில்லாமல் மிகவும் துயரத்தில் உழன்றார்கள். பொதுப் போக்குவரத்தைக்கூடப் பயன் படுத்தமுடியாத நிலை. இவை அனைத்திற்கும் நடுவே, சினிமாவில் நடிப்பதற்கான நேர்முகத் தேர்வை நினைவு கூர்ந்த அவர், பேருந்தில் டிக்கெட் வாங்கப் பணம் இல்லாமல் வொர்லியில் இருந்து அந்தேரிக்கு நடந்துசென்றைத தெரிவித்தார்.

"நான் சினிமா அலுவலகத்தை அடையும் நேரத்தில் மிகவும் சோர்வாக இருந்தேன். அப்போது யாரோ கதைக்களம் இரட்டை வேடம் என்று பேசியதைக் கேட்டதும் உற்சாகமடைந்தேன். அதே உற்சாகத்துடன் ஆடிஷனில் கலந்து கொண்டேன். எனக்கு முதல் காட்சியைக் கொடுத்தனர். பின்னர் ஆறு காட்சிகளை மீண்டும் நடித்துக்காட்ட சொன்னார்கள். இதுதான் என் நடிப்பு பயணத்தின் முதல் புள்ளியாக இருந்தது" என்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சஞ்சீவானி மற்றும் சாராபாய் ஆகிய படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இது மகத்தான பாராட்டைப் பெற்றது. பின்னர், சில ஆண்டுகளில் நடிப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அப்போது அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.

"என் மகன் முதல் அடி எடுத்துவைப்பதைப் பார்ப்பது ஓர் ஆசீர்வாதம். அடுத்த ஆறு ஆண்டுகள் குடும்பத்திற்காகச் செலவழித்தேன்" என்கிறார். ஏழு ஆண்டுகள் வீட்டிலிருந்த பிறகு மீண்டும் நடிக்க ஆசைப்பட்டார்.

"7 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு குழந் தைக்கு தாயாக மாறிய பிறகு, திரையில் நான் எப்படி இருப்பேன் என்று கவலைப்பட்டேன். என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா, என் எடையைப் பற்றி என்ன சொல்வார்கள் என்று யோசித்தேன். அதில் பல சுய சந்தேகங்கள் இருந்தன. ஆனால், 2020-ம் ஆண்டு வெளியான அனுபமா தொடரில், அந்த கதாபாத்திரமாகவே மாறியிருந்ததால், நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கையும், வறுமைநிலையும் மாறிவிட்டது. இன்று சின்னத்திரையில், அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக உயர்ந்திருக்கிறேன்" என்கிறார்.

அனுபமா தொலைக்காட்சி தொடருடன் தன் தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதுபோல் உணர்கிறார் ரூபாலி. அவரது தந்தை கோரா காகஸ், தபஸ்யா போன்ற பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தயாரித்தார். அவரது பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானவை.

பெண்கள் மூன்று விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று ரூபாலி கங்குலி விரும்புகிறார்: அவை, "சுய மதிப்பு, சுய அன்பு மற்றும் சுய மதிப்பீடு. உங்களை வெறுப்பவர்களை பின்னுக்குத் தள்ளுங்கள்."

Tags:    

மேலும் செய்திகள்