புற்றுநோயில் இருந்து விடுபட நம்பிக்கை ஏற்படுத்தும் நடிகை சாவி மிட்டல்

மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார், நடிகை சாவி மிட்டல். `'வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்பதே இவரது தாரக மந்திரமாக இருக்கிறது.

Update: 2022-08-07 11:06 GMT

புற்றுநோயுடன் போராடுவது குறித்து வெளிப்படையாக பேசுகிறார் சாவி மிட்டல். தான் வாழ்வில் எதிர்கொண்ட ஏற்றத் தாழ்வுகள் மற்றும் புற்றுநோயால் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றியும் பேசுகிறார்…

"நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வுதான். தனியார் டி.வி. மூலம் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமானேன். கடந்த 15 ஆண்டு களாக இந்த துறையிலேயே இருக்கிறேன். தற்போது எனது கணவருடன் இணைந்து டிஜிட்டல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் என்னைப் பின்தொடர்பவர்களிடம் புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பதாகக் கூறினேன். மேலும், அது தொடர்பான அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை குறித்தும் அவர்களுடன் விவாதித்தேன்.

எனக்கு புற்றுநோய் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை உடலில் லேசான காயம் ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தார்கள். அந்த நிலையில் நான் அழவோ, பீதியடையவோ இல்லை. மிகவும் அமைதியாக இருந்தேன். சிறிய விஷயங்களுக்கு எல்லாம் வருத்தப்படும் நான், இவ்வளவு பெரிய பிரச்சினை வந்தபோது மிகவும் அமைதியாக இருந்தேன்.

இதனை ஏற்றுக் கொள்ள சில நாட்கள் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் பல டாக்டர்கள் மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களிடம் பேசினேன். அப்போதுதான் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால், அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். என் குடும்பத்தாரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். என் கணவர்தான் பேராதரவாக இருந்தார். என் குழந்தைகள் கூட புரிந்து கொண்டார்கள்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தை ஒரு கட்டத்தில் வெளியே வந்தாக வேண்டும். அதுபோல்தான் இதையும் பார்த்தேன். மற்ற அறுவை சிகிச்சையை போல்தான் இதையும் கையாண்டேன். புற்றுநோய் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. எதிர்பாராத விதமாக புற்றுநோய்க்கு ஆளானால்அதனை சமாளிக்க வேண்டும். அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்