மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில்... மகுடம் சூடிய இளைஞர்

நம் மதுரை மண்ணில் பிறந்த, ‘சச்சின் சிவா’ என்ற இளைஞர், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல... மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

Update: 2022-11-06 08:36 GMT

அவரை சந்திக்க சென்ற நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், ஒரு சாதாரண பெட்டிக்கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கிடையே அவரிடம் பேச தொடங்கினோம்.

''விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே உள்ள பாப்பாக்குளம் தான் பூர்வீகம். பிறந்தது மதுரையில் தான்.

போலியோ பாதிப்பினால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு சரிவர நடக்கமுடியாமல் முடங்கினாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால், என்னை யாரும் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.




கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற போட்டிகளிலும் என்னை இணைந்து கொண்டேன். அந்த சமயத்தில், அதாவது 2008-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி அறிந்தேன். அதற்கு சென்னையில் வீரர்கள் தேர்வு நடப்பதாக அறிந்து அங்கு சென்றேன். என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி, தமிழக அணிக்கு தேர்வானேன்'' என்று உற்சாகமாக பேசும் சச்சின் சிவா, ஆரம்பத்தில் ஒருசில ஆட்டங்களில் புறக்கணிக்கப்பட்டார்.

''தமிழக அணிக்கு தேர்வாகியது மகிழ்ச்சி என்றாலும், பல போட்டிகளில் வெளியே அமர்ந்திருந்தேன். அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டேன். இதற்கிடையே, 2011-ல் மதுரையில் தென்னிந்திய அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் தமிழக அணியை இரண்டாக பிரித்து, மதுரை அணியை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கினர். இறுதிப்போட்டி வரை முன்னேறி கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றோம். கேப்டனாக எனக்கு கிடைத்த முதல் பரிசு அதுதான். கூடவே மாநில அணிக்கு கேப்டன் பொறுப்பில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட இடம் கிடைத்தது. தமிழக அணிக்கு நிறைய வெற்றிக்கனிகளை பெற்றுக் கொடுத்தேன்.

என்னுடன் இருந்த சக வீரர்களை அரவணைத்து செல்வதில் தனி கவனம் செலுத்தினேன். அதனால் தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது'' என்றவர், மாநில அணியிலிருந்து, இந்திய அணிக்கு முன்னேறியதை பகிர்ந்து கொண்டார்.

''மேற்கு வங்காள அணிக்கு எதிராக 115 ரன்களை 65 பந்தில் அடித்து சாதனை படைத்தேன். இதுபோல், அசாமில் நடந்த போட்டியில் மத்திய பிரதேசத்திற்கு எதிராக 16 பந்தில் அதிவேகத்தில் 50 ரன் அடித்து சாதனை படைத்தேன். இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் நான்தான். இந்த சாதனைகள் தான் இந்திய அணிக்கு என்னை அழைத்து சென்ற ஏணிப்படிகள்.

பலகட்ட போராட்டங்களுக்கிடையே, 2015-ல் முதல் முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதற்கு முக்கிய காரணம், கேரளாவில் நடந்த போட்டிகளில் 3 முறை 50 ரன்கள் குவித்தேன். விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் சாதனை படைத்தேன். இந்த 2 போட்டியிலும் நான் ஆட்டநாயகன் விருதை பெற்றேன். இதனை பார்த்த இந்திய அணி நிர்வாகத்தினர், என்னை இந்திய அணியில் சேர்த்துக்கொண்டனர்'' என்ற வரிடம், இந்திய அணிக்காக விளையாடிய அனுபவத்தை கேட்டோம்.

''இந்திய அணிக்கான என்னுடைய முதல் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிரானது. டெல்லியில் நடந்த முதல் போட்டியை மறக்க முடியாது. அந்த போட்டியில் களம் இறங்கவில்லை. அந்த வருத்தம் என் மனத்திற்குள் இப்போதும் உண்டு. அதற்கு அடுத்து நடந்த ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியிலும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியவில்லை. வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியிலும் வெளியில் இருந்தேன்.

அணியில் இடம் கிடைத்தாலும், களத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தபடியாக நடந்த சில போட்டிகளில் என்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி, 2019-ம் ஆண்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உயர்ந்தேன். கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக எனது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால், தற்போது இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அந்த அறிவிப்பானது, தீபாவளி தினத்தில் வெளியானதால், மகிழ்ச்சி இரட்டிப்பானது'' என்பவர், இந்திய அணியை வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார்.

''ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் இந்தியா-இலங்கை போட்டியில் முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்த இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னதான் மன மகிழ்ச்சி இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும் அங்கீகாரமும், செல்வாக்கும் எங்களுக்கு கிடைப்பதில்லை'' என்று வேதனைப்படும் சச்சின் சிவா, கிரிக்கெட்டில் போதிய வருமானம் இல்லாததால், குடும்ப சுமையை போக்க, மளிகைக்கடை நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்கிறார்.

''எனக்கு சரண்யா என்ற மனைவியும், கவுதம் சச்சின் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்து கொண்டு, மளிகைக்கடைக்கு தேவையான பொருட்கள், காய்கறிகளை வாங்கி போட்ட பிறகு, பயிற்சிக்கு சென்று விடுவேன். சில சமயங்களில், கிரிக்கெட்டை மையப்படுத்தி வீட்டில் சில சலசலப்புகளும் எழும். இருப்பினும், எந்த கஷ்டம் வந்தாலும் கிரிக்கெட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

''எந்த அளவிற்கு பண நெருக்கடி இருந்தாலும் கிரிக்கெட்டை நீ விட்டு விடக்கூடாது'' என நடிகர் சிவகார்த்திகேயனும் என்னை ஊக்கப்படுத்தினார். மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டை வாங்கி கொடுத்திருக்கிறார். தற்போது வரை அவரால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்'' என்பவர், மத்திய-மாநில அரசுகளின் உதவிகள் கிடைக்கும்பட்சத்தில், மாற்றுத்திறனாளி வீரர்களின் கஷ்டங்கள் தீரும் என்ற கருத்துடன் விடைபெற்றார்.

தற்போது இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அந்த அறிவிப்பானது, தீபாவளி தினத்தில் வெளியானதால், மகிழ்ச்சி இரட்டிப்பானது

ஐ.பி.எல். போன்று, மாற்றுத்திறளானிகளுக்காக நடத்தப்படும் டி.பி.எல். போட்டியிலும் கேப்டனாக சச்சின் சிவா பொறுப்பு வகித்திருக்கிறார். துபாயில் நடந்த போட்டியில், 'சென்னை சூப்பர் ஸ்டார்' அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று, சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். நடிகர் கமல்ஹாசன், இவர்கள் துபாய் செல்வதற்கும், விளையாடுவதற்கும் பல உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்