பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!

பாபர் அசாம் எப்படி ரன் குவிப்பதில் கெட்டிக்காரரோ, அதேபோல, ஷகீன் ஷா அப்ரிடி தன்னுடைய வேகமான பந்துவீச்சினால் வலது கை ஆட்டக்காரர்களை தனது இடதுகை பந்து வீச்சில் கதிகலங்க வைப்பதில் கெட்டிக்காரர்.

Update: 2022-11-13 08:27 GMT

உலக கோப்பை போட்டித்தொடரின் முதல் போட்டியில், இந்தியாவுடன் தோல்வியடைந்த பாகிஸ்தான், அந்த ஆட்டத்திற்கு பிறகு சுதாரிக்கவே இல்லை. கிரிக்கெட் உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஜிம்பாவேயிடம், ஒரு ரன்னில் தோற்று, அரை இறுதிச் சுற்றுக்கான சாத்தியக்கூறுகளே இல்லாமல் பரிதவித்து கொண்டிருந்தது. அணியை இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியவர்களே, அந்த அணியை மீட்டெடுத்து இன்று இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை. பாகிஸ்தான் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி.

ஏன்? என்பதற்கான சில காரணங்கள்:

பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் பலம், தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் அதிரடி தொடக்கம்தான். கடந்த 2 ஆண்டுகளில், பாகிஸ்தான் அணி வெற்றிக்கனியை ருசித்தபோதெல்லாம், பாபர் அசாமின் மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டிருக்கும். ஆனால் உலக கோப்பையில் ஆரம்ப நிலை போட்டிகளில், பாபர் அசாம் பெரிதாக ஜொலிக்கவில்லை. கடைசி 10 டி-20 ஆட்டங்களில் பாபர் அசாம், மொத்தம் 220 ரன்களை அடித்திருக்கிறார். அதிலும் கடைசி 5 ஆட்டங்களில்தான், 170 ரன்களை திரட்டி இருக்கிறார். அதற்கு முந்தைய 5 ஆட்டங்களில், ஒற்றை இலக்கிலான ரன்களும், ஒருசில 'டக் அவுட்' மட்டுமே மிஞ்சியது.

ஷகீன் ஷா அப்ரிடி

பாபர் அசாம் எப்படி ரன் குவிப்பதில் கெட்டிக்காரரோ, அதேபோல, ஷகீன் ஷா அப்ரிடி தன்னுடைய வேகமான பந்துவீச்சினால் வலது கை ஆட்டக்காரர்களை தனது இடதுகை பந்து வீச்சில் கதிகலங்க வைப்பதில் கெட்டிக்காரர். இவரும், உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசவில்லை. இந்தியாவுடனான முதல் போட்டியில் விக்கெட் எடுக்க திணறினார். கூடவே 4 ஓவரில் 34 ரன்களையும் வாரி வழங்கினார். அடுத்த இரு போட்டிகளில், வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. ஆனால் இப்படி தடுமாறிய அப்ரிடி, அடுத்த மூன்று ஆட்டங்களில், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள், அரை இறுதியில் பலம் வாய்ந்த நியூசிலாந்திற்கு எதிரான 2 விக்கெட்டுகள் என தெறிக்கவிட்டு, அணிக்கு இறுதிப்போட்டிக்கான வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்தார். இவர் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, இவர்கள் இருவரும்தான் வில்லன்கள், இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள். இறுதிப்போட்டியில் இவர்களது கதாபாத்திரம் எதுவென்று பார்ப்போம்...!

Tags:    

மேலும் செய்திகள்