மந்திராலயா முன் விஷம் குடித்து பெண் தற்கொலை- மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

நில அபகரிப்பு விவகாரத்தில் மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா முன் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-28 18:45 GMT

மும்பை, 

நில அபகரிப்பு விவகாரத்தில் மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா முன் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள்

துலே மாவட்டத்தை சேர்ந்தவர் சீத்தல் காடேகர். இவரது கணவரின் பெயரில் துலே எம்.ஐ.டி.சி. பகுதியில் நிலம் இருந்து உள்ளது. அந்த நிலத்தை 2010-ம் ஆண்டு எம்.ஐ.டி.சி. அதிகாரிகள் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபரின் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. நில மோசடி விவகாரத்தில் நீதி கேட்டு சீத்தல் காடேகர் அதிகாரிகளை சந்தித்து வந்து உள்ளார். இதேபோல நவிமும்பையை சேர்ந்தவர் சங்கீதா தாவரே. போலீஸ்காரரான இவரது கணவர் அறுவை சிகிச்சையின் போது காலை இழக்க நேரிட்டு உள்ளது. எனவே அதற்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கீதா தாவரே அதிகாரிகளிடம் முறையிட்டு வந்து உள்ளார்.

விஷம் குடித்தனர்

இந்தநிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் மூலமாக சீத்தல் காடேகருக்கும், சங்கீதா தாவரேவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. 2 பேரும் தங்கள் பிரச்சினைக்கு நீதி கேட்டு மும்பையில் உள்ள மந்திராலயா முன் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் 2 பேரும் மந்திராலயாவுக்கு வாடகை காரில் வந்தனர். அவர்கள் மந்திராலயா வாசல் முன் வந்தவுடன் திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி

இதில், உயிருக்கு போராடிய அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று சீத்தல் காடேகர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா தாவரே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நில அபகரிப்பு விவகாரத்தில் மந்திராலயா முன் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்