மகளிர் இடஒதுக்கீடு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத 4 எம்.பி.க்களுக்கு கொறாடா நோட்டீஸ் - சிவசேனா நடவடிக்கை

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.பி.க்கள் 4 பேருக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Update: 2023-09-27 19:15 GMT

மும்பை, 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.பி.க்கள் 4 பேருக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சிவசேனா பிளவு

சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி காரணமாக உடைந்தது. இந்த நிலையில் ஷிண்டே அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதுடன் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் கைப்பற்றியது. கட்சியின் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே வசம் உள்ளனர். இருப்பினும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிக்கு ஆதரவாக விநாயக் ராவத், ராஜன் விச்சாரே, ஓம்ராஜே நிம்பல்கர் மற்றும் சஞ்சய் ஜாதவ் ஆகிய 4 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து ஷிண்டே தலைமை சிவசேனா அவர்களுக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொறடா நோட்டீஸ்

கடந்த 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் முழுமையாக கலந்து கொள்ளுமாறு கட்சி எம்.பி.க்களுக்கு கடந்த 14-ந் தேதியே கொறடா நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது நீங்கள் கலந்துகொள்ளாதது தேசிய நலன் தொடர்பான பிரச்சினையாக உள்ளது. உங்களின் நடவடிக்கை கொறடா உத்தரவை மீறியதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தநிலையில் எம்.பி.க்களுக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பியது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "எங்கள் மக்களவை எம்.பி.க்கள் 4 பேருக்கு எதிராக கொறடா நோட்டீஸ் அனுப்பப்பட்டது மிக சிறிய விஷயம். அவர்கள் அணியை சேர்ந்த யாரும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்