மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதத்தை எட்டியது - மாநகராட்சி தகவல்
மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதத்தை எட்டியதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதத்தை எட்டியதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.
50 சதவீதம் எட்டியது
பருவ மழை தாமதமானதால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 10 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது. இதையடுத்து மும்பைக்கு குடிநீர் வெட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஏரிகளின் நீர்மட்டம் மொத்தம் 50 சதவீதம் எட்டி உள்ளது. குறிப்பாக துல்சி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த ஏரியில் இருந்து மும்பைக்கு தினசரி 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் போதுமான நீர் தேவையை உறுதி செய்ய பருவமழை முடிவதற்குள் ஏரிகளில் 14.47 லட்சம் எம்.எல். நீர் இருப்பு இருக்கவேண்டியது அவசியம்.
தற்போதைய நிலவரம்
எனவே தற்போது நீர் இருப்பு அதிகரித்துள்ளபோதிலும், நகரில் 10 சதவீதம் குடிநீர் வெட்டை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், தற்போது உள்ள 10 சதவீதம் குடிநீர் வெட்டு தொடர்ந்து அமலில் இருக்கும் என மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு தெரிவித்து உள்ளார். மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் முறையே மேல்வைத்தர்ணாவில் 21.28, மோடக்சாகரில் 78, தான்சாவில் 89.27, வைத்தர்ணாவில் 59.16, பாட்சாவில் 42.08, விகாரில் 83.27 துல்சியில் 100 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் ஏரிகளில் 87.45 சதவீதம் நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.