2019-ம் ஆண்டு அமைந்த பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா?- சிவசேனா கேள்வி

2019-ம் ஆண்டு அமைந்த பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-07-17 17:29 GMT

மும்பை, 

2019-ம் ஆண்டு அமைந்த பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் அமைக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் கலைந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளியேறியதாக தெரிவித்தனர்.

இதை இயற்கைக்கு மாறான கூட்டணி என குறிப்பிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர்.இந்தநிலையில் சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின்  இது குறித்து வெளியான கட்டுரையில் கூறியதாவது:-

இயற்கைக்கு மாறானது

சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது போலவே கடந்த 2019-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித்பவார் வெளியேறி தேவேந்திர பட்னாவிசுடன் சேர்ந்து அரசை அமைத்தார். தேசியவாத காங்கிரஸ் தங்கள் கட்சியை ஒழித்துவிடும் என்று எந்த பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களும் அப்போது கூறவில்லை.

பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்திருந்தால், இது இயற்கைக்கு மாறான கூட்டணி என்று அழைக்கப்படுமா? அரசியலில் இயற்கை அல்லது இயற்கைக்கு மாறானது என்று எதுவும் இல்லை. 2014-ம் ஆண்டு ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பிரபுல் படேல் தனது கட்சி பா.ஜனதாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். அப்போது பா.ஜனதா தேசியவாத காங்கிரசின் ஆதரவை நிராகரிக்கவில்லை.

சிவசேனா பிளவு

இந்துத்வா பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத்தின் குழுவுடன் இணைந்த தீபக் கேசர்கர் மற்றும் உதய் சமந்த் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசேனாவில் இணையும் முன்பு தேசியவாத காங்கிரசில் இருந்தவர்கள். சரத்பவாரின் பள்ளியில் படித்த சான்றிதழுடன் தான் சிவசேனாவில் இணைந்தனர். அவர்கள் ஏன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இவ்வளவு வெறுக்க வேண்டும்?. தார்மீக பிரச்சினையை விட இது அரசியல் சுயநலம்.மராட்டியத்தில் தலைமை சுதந்திரமாக வளர்வதை மத்திய அரசு ஒருபோதும் விரும்புவதில்லை.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில் தேசிய தலைவராக உருவெடுக்க உள்ளதாக மத்திய அரசு உணர்ந்ததால் சிவசேனாவில் பிளவை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்