திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.45 லட்சம் அபேஸ் செய்தவருக்கு வலைவீச்சு
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.45 லட்சம் அபேஸ் செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
நவிமும்பை,
நவிமும்பை சான்பாடாவை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் மும்பை கப்பரேடு பகுதியை சேர்ந்த 42 வயது நபரின் அறிமுகம் கிடைத்தது. திருமணமான நபர் அப்பெண்ணிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என பொய்யான தகவல் தெரிவித்து அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றார். திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணிடம் வாக்குறுதி அளித்தார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.45 லட்சம் வரையில் நகை, பணத்தை அப்பெண்ணிடம் பெற்றார். இதனை திருப்பி கேட்ட அப்பெண்ணை சரமாரியாக தாக்கினார். பெண்ணின் மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து சான்பாடா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.