வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாட்டில் இருந்து எந்திரத்தில் கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-25 17:05 GMT

மும்பை, 

வெளிநாட்டில் இருந்து எந்திரத்தில் கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் பறிமுதல்

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரவுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் ஹாங்காங்கில் இருந்து பசிபிக் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பார்சல்களை பிரித்து சோதனை போட்டனர். இந்த பார்சலில் 30 எலக்ட்ரிக் பிரேக்கர் எந்திரம் இருப்பதாக தெரியவந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் எந்திரத்தை பிரித்து பார்த்த போது உருளை வடிவில் இருந்த தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதில் இருந்த 16 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.7 கோடியே 39 லட்சம் ஆகும்.

2 பேர் கைது

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனியார் நிறுவனம் சார்பில் எந்திரத்தை இறக்குமதி செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எந்திரத்தை வாங்க வந்த தனியார் நிறுவன இயக்குனர் மற்றும் டெல்லியை சேர்ந்த கமல் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் 20 முறைக்கு மேல் ரூ.150 கோடி அளவில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்