ஆனந்த சதுர்த்தியை முன்னிட்டு மிலாடி நபி ஊர்வலம் தள்ளிவைப்பு
ஆனந்த சதுர்த்தியை முன்னிட்டு பால்கர் மாவட்டத்தில் மிலாடி நபி ஊர்வலம் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வசாய்,
ஆனந்த சதுர்த்தியை முன்னிட்டு பால்கர் மாவட்டத்தில் மிலாடி நபி ஊர்வலம் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனந்த சதுர்த்தி
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களான தானே, பால்கர், புனே ஆகிய இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 2 ஊர்வலங்கள் நடைபெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இருந்தது.
மிலாடி நபி ஊர்வலம் தள்ளிவைப்பு
இந்தநிலையில் பால்கர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மிலாடி நபி ஊர்வலத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளன. ஆனந்த சதுர்த்திைய முன்னிட்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய தங்களது மிலாடி நபி ஊர்வலத்தை ஒரு நாள் தள்ளி வைத்து இருப்பதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது பற்றி பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாசாகேப் பாட்டீல் கூறியதாவது:- நடப்பு ஆண்டு இரு மதங்களின் பண்டிகைகள் ஒரே நாளில் வருவதால் முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் முஸ்லிம் அமைப்புகள் தங்களது ஊர்வலத்தை ஒரு நாள் தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் இந்த முடிவு மராட்டிய மாநிலத்திற்கு முன்மாதிரியாக அமைந்து உள்ளது. மேலும் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.