பா.ஜனதா அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் - நானா படோலே கூறுகிறார்
பா.ஜனதா அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியுள்ளார்
கோண்டியா,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே, பண்டாரா மாவட்டத்தில் ஜன்சம்வாத் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் நேற்று கோண்டியா வந்தார். அங்கு அவர் பேசியதாவது:- மராட்டிய மக்கள் மகாத்மா புலே, சத்ரபதி சாகு மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். அவர்கள் பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகளால் சலிப்படைந்து தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திரும்ப பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மராத்தா மக்களுக்கு இடையே சண்டையை தூண்டிவிடும் பாவ செயலை அவர்கள் செய்துள்ளனர். இன்று பா.ஜனதா மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழு பலத்துடன் போட்டியிடும். இளம் தலைவர்களை வளர்க்க விரும்புவதால் புதிய முகங்களை களமிறக்க விரும்புகிறோம். மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.