பிவண்டியில் காணாமல் போன 6 வயது சிறுமி பிணமாக மீட்பு; பிளாஸ்டிக் பேரலில் உடலை போட்டு சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு
பிவண்டியில் காணாமல் போன 6 வயது சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள். பிளாஸ்டிக் பேரலில் உடலை போட்டுச் சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தானே,
பிவண்டியில் காணாமல் போன 6 வயது சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள். பிளாஸ்டிக் பேரலில் உடலை போட்டுச் சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 வயது சிறுமி
தானே மாவட்டம் பிவண்டி தப்சிபாடா பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தப்சிபாடாவில் உள்ள பூட்டிக்கிடந்த குடிசை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதில் அங்கு இருந்த பிளாஸ்டிக் பேரல் ஒன்றில் சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கொலை
உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அது காணாமல் போன 6 வயது சிறுமி எனவும், கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறுமியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பேரலில் போட்டுச்சென்ற ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.