வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மந்திரி உதய் சமந்த் ரத்து செய்யவேண்டும்; ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
மராட்டிய தொழில்துறை மந்திரி உதய் சமந்த் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவேண்டும் என ஆதித்ய தாக்கரே வலியுறுத்தியுள்ளார்
மும்பை,
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியினர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் உத்தவ் சிவசேனா முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தொழில்துறை மந்திரி உதய் சமந்தை கடுமையாக தாக்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டிய தொழில்துறை மந்திரி உதய் சமந்த் வரி செலுத்துவோரின் பணத்தில் விடுமுறை எடுக்கிறார். நீங்கள் லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதாக கூறுகிறீர்கள். இதில் கலந்துகொள்ளப்போவது யார்? சுவிட்சர்லாந்து, டாவோசில் தற்போது உலக வர்த்தக மாநாடு ஏதும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் நீங்கள் என்ன வகையான ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளீர்கள்?. இது உங்களின் பயண திட்டம் இல்லை?. நீங்கள் டாவோசில் பொறுப்பு மந்திரியாக உள்ளீர்களா?
உலக பொருளாதார கூட்டம் ஜனவரி மாதம் நடைபெறுவதால் டாவோசில் ஆய்வு பயணம் என்பது வெறும் ஏமாற்று வேலையாகும். வரி செலுத்துவோரின் பணத்தில் அமைச்சர் மேற்கொள்ள உள்ள சுவிட்சர்லாந்து விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசிடம் இவ்வளவு பணம் இருந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி பேசவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.