அம்பேத்கர் சிலை மாதிரியை ஆய்வு செய்த மந்திரிகள்
இந்து மில் வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அம்பேத்கரின் 350 அடி சிலையின் மாதிரியை உத்தரபிரதேசம் சென்று மந்திரிகள் ஆய்வு செய்தனர்.
மும்பை,
இந்து மில் வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அம்பேத்கரின் 350 அடி சிலையின் மாதிரியை உத்தரபிரதேசம் சென்று மந்திரிகள் ஆய்வு செய்தனர்.
மோடி அடிக்கல்
மும்பையில் உள்ள இந்து மில் வளாகத்தில் சட்டமேதை அம்பேத்கரின் 250 அடி உயர பிரமாண்ட சிலையுடன் நினைவிடம் அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்தது. இந்த நினைவிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு அக்டோபரில் அடிக்கல் நாட்டினார். 2020-ம் ஆண்டு ஜனவரியில் சிலையின் உயரத்தை 250 அடியில் இருந்து 350 அடியாக அதிகரிக்க மராட்டிய அரசு முடிவு செய்தது.
இந்தநிலையில் மந்திரி தனஞ்செய் முண்டே மற்றும் மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் சிற்பி ராம் சுதார் வடிவமைத்த 350 அடி சிலையில் 25 அடி சிலை மாதிரியை பார்வையிட்டனர். இதில் சில மாற்றங்களையும் பரிந்துரை செய்தனர்.
இதுகுறித்த மந்திரி தனஞ்செய் முண்டே கூறியதாவது:-
2024-ம் ஆண்டு அர்ப்பணிப்பு
நாங்கள் சிலை மாதிரியை பார்வையிட்டு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளோம். 25 அடி சிலை மாதிரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் 350 அடி சிலைக்கான பணிகள் தொடங்கும்.
அனைத்து சாதி மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் மரியாதையுடன் வாழ வாய்ப்பளித்த டாக்டர் அம்பேத்கரின் நினைவிடத்தின் பணியை விரைவாக முடிக்க மகா விகாஸ் அகாடி அரசு பாடுபாட்டு வருகிறது. 2024-ம் ஆண்டு நினைவிடத்தை மக்களுக்கு அர்ப்பணிக்க அரசு விரும்புகிறது. 350 அடி உயர சிலைக்கான பீடம் 100 அடி உயரத்தில் அமைக்கப்படும். இதுவரை பீடத்தின் பணியில் 75 அடி உயரம் வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
நினைவிடத்திற்கான பணிகளை எம்.எம்.ஆர்.டி.ஏ. மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக அரசு ரூ.1,100 கோடி செலவிடும். நினைவிட பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.