'கிச்சடி' வினியோக முறைகேடு வழக்கு: உத்தவ் சிவசேனா நிர்வாகியிடம் விசாரணை
‘கிச்சடி' வினியோக முறைகேடு வழக்கு தொடர்பாக உத்தவ் சிவசேனா நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்
மும்பை,
கொரோனா பரவலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு வினியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக வந்த புகார் குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் கிச்சடி முறைகேடு குறித்து போலீசார் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த நிர்வாகி அமோல் கிரித்திகரிடம் விசாரணை நடத்தினர். கிச்சடி முறைகேடு குறித்து அவரிடம் போலீசார் 2-வது முறையாக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி வினியோகம் செய்ய ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து அமோல் கிரித்திகர் ரூ.52 லட்சமும், யுவசேனா நிர்வாகி சூரஜ் சவான் ரூ.37 லட்சமும் வாங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அமோல் கிரித்திகர், மும்பை வடமேற்கு தொகுதி எம்.பி. கஜானன் கிரித்திகரின் மகன் ஆவார். கஜானன் கிரித்திகர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.